பொது இடங்களில் மது அருந்தி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களைக் கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும் காவல்துறையினர் அவ்வப்போது ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி தாக்கல் செய்த மனுவில், பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்கவும், மது விற்பனையை கட்டுப்படுத்தவும் கோரப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி, மது அருந்துவோரால் பிரச்சனை ஏற்பட்டால், பொதுமக்கள் புகார் தெரிவிக்க காவல் நிலைய அதிகாரிகளின் தொலைபேசி, மின்னஞ்சல், வாட்ஸ்அப் எண்களை வழங்க வேண்டும் எனக் கூறியது.
மேலும் பொதுமக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு, டிஜிபி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மது கடைகள் மற்றும் அவற்றின் வளாகத்தைத் தவிர, பொது இடங்களில் மது அருந்துவதை கட்டுப்படுத்த, அவ்வப்போது ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.