விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000., இன்னும் 30 நாட்களில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது. பின்னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டது. இதை பெறுவதற்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், நான்கு சக்கர வாகனம் (கார், ஜீப் போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் திட்டத்துக்கு தகுதியற்றவர்களாக கருதப்பட்டனர்.
அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதியுள்ள பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெற்று வரும்‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்களில் கடந்த முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஜூலை 15 முதல் நடைபெற்று வரும் முகாம்களில் விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரூ.1,000 தொகை வழங்கப்படும். விண்ணப்பங்களுக்கு 45 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை இந்த முகாம் மூலம் 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு இன்னும் 30 நாட்களில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட உள்ளது.
ஒருவேளை நீங்கள் கொடுத்த ஆவணங்கள் சரியாக இல்லை என்றால் மீண்டும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் இதுவரை இந்த திட்டத்தில் விண்ணப்பிக்காத நபர்கள் உடனே சென்று உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.