தமிழகம் முழுவதும் இன்று 12,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.. இந்த கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கிராம சபைக் கூட்டங்கள் ஜனநயாகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம்.. கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகள் அளிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஒவ்வொரு இல்லத்திலும் குழந்தைகள் படிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
மழைக்காலத்தில் டெங்கு, சிக்கன்குனியாவை தடுக்க சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.. பேரிடர் நேரங்களில் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்க சரியாக திட்டமிட வேண்டும்.. 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவை முறையாக செயல்படுத்தி கிராமத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்..
மழை நீரை சேமிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.. நீரை பணத்தை போன்று பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டும்.. அரசு இத்தனை திட்டங்களை செய்தாலும் குடிமக்களாகிய உங்களுக்கும் பொறுப்பு உள்ளது.. கிராம சபையில் மக்கள் ஆலோசித்து 3 முக்கிய தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.. புவி வெப்பமயமாதல், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்..” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்.. அப்போது அந்த ஊரில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.. மேலும் அந்தந்த ஊரின் முக்கிய கோரிக்கைகள் என்ன என்பது குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்..
அப்போது மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்தும் கேட்டறிந்தார்.. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்துள்ளார்களா? என கேட்டார்.. அதற்கு அந்த ஊராட்சி மன்ற தலைவர் இந்த திட்டத்தில் விடுபட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்தனர்.. அப்போது தகுதி உடையவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.. இதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.