கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயில், இயற்கையால் சூழப்பட்ட அமைதியான ஆன்மிகத் தலமாக விளங்குகிறது. தென்னை மரங்களும் மலைகளும் சூழ்ந்த இத்தலம், மனச்சோர்வு மற்றும் குறைகள் நீங்கி மன அமைதி கிடைக்க வேண்டி வரும் பக்தர்களின் நம்பிக்கையைக் காக்கும் தெய்வத் தலமாக திகழ்கிறது.
இந்தக் கோயிலில் அம்மன் 17 அடி உயரம் கொண்ட சயன கோலத்தில் அருள்புரிகிறார். அம்மனின் காலடி அருகே அசுரனின் சிற்பம் அமைந்துள்ளதும் இத்தலத்தின் சிறப்பாகும். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து மனக்குறை நீக்கும் வழிபாடு செய்து வருகின்றனர்.
பொருள் இழப்பு, கடன் பிரச்சனை அல்லது பகைமை காரணமான மனக்குறைகள் இருந்தால், பக்தர்கள் “நீதிக் கல்லில்” மிளகாய் அரைத்து பூசி வழிபடுவார்கள். இதன் மூலம், தங்கள் மனக்குறை நீங்கி, நீதி கிடைக்கும் என நம்புகின்றனர். வழிபாடு முடிந்த பின் மன அமைதி ஏற்படுகிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
மனக்குறை நீங்கிய பின், பக்தர்கள் 90 நாட்கள் கழித்து கோயிலுக்கு திரும்பி, அம்மனுக்கு எண்ணெய் காப்பு செய்து நன்றி செலுத்துவது வழக்கம். இது அந்த தர்ம வழிபாட்டின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. மாசாணியம்மன் கோயிலில், மனக்குறை நீக்கும் வழிபாடுகளோடு மட்டுமல்லாமல், பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றவும் பக்தர்கள் மரங்களில் மஞ்சள் பூசி, எலுமிச்சை கட்டி வழிபடுகின்றனர்.
“மாசாணம்” என்பது மயானம் என்பதைக் குறிக்கும். அதாவது, மயானத்தில் நீதி மற்றும் சக்தியின் வெளிப்பாடாக அம்மன் அருள்புரிகிறார். எனவே, மாசாணியம்மன் நீதி தேவதையாகவும் வணங்கப்படுகிறார். இத்தலம், மனக்குறை நீங்க மன அமைதி தேடும் பக்தர்களுக்கு ஆன்மீக நிம்மதியை தரும் தாயாக விளங்குகிறது.
Read more: இந்த 4 ராசிக்காரர்களும் ரொம்ப கோபக்காரர்கள்.. எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க!



