தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய மணிகண்டன் (35), பிளஸ்-1 மாணவியைக்கு (16) பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஏப்ரல் மாதம் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது பிளஸ்-2 படிக்கும் அந்த மாணவி, சமீபத்தில் உடல்நலக் குறைவால் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை சென்றபோது கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள், கர்ப்பம் சுமார் 6 மாதங்களாக இருப்பதாக தெரிவித்தனர். மாணவியிடம் விசாரித்தபோது ஆசிரியர் மணிகண்டன் தான் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பெற்றோர் ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ், போக்சோ சட்டத்தின் கீழ் கணித ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து, விரைவாக விசாரணைத் தொடங்கினர். மாணவியின் அறிக்கை, மருத்துவ ரிப்போர்ட் ஆகியவற்றின் அடிப்படையில், மணிகண்டனை அக்டோபர் 4 அன்று கைது செய்தனர். அவர், தூத்துக்குடி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாணவி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உளநல சிகிச்சை மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சிறப்பு ஆலோசகர்கள் குழுவும் அவளுடன் பணிபுரிகிறது. இதற்கிடையில்,பள்ளி நிர்வாகம் சம்பவத்தை மறைத்ததாக குற்றம் சாட்டி, உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டக் குழு, “பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மூடப்பட வேண்டும்” என்று கோரியது. தாசில்தார், “உரிய விசாரணை செய்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நிர்வாகத்தின் பங்கு குறித்தும் ஆய்வு செய்யப்படும்” என்று உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: Tn Govt: ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு…!



