கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! தடபுடலாக தயாரான விருந்து!

மதுரையின் மிக முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப். 21) கோலாகலமாக நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. திருக்கல்யானத்தை காண்பதற்காக அதிகாலை முதலே மதுரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஏராளமான புதுமணத் தம்பதிகளும் வருகை தந்தனர்.

சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் பட்டு சாத்தப்பட்டு எழுந்தருளினர். தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாக மீனாட்சி அம்மனுக்கு வைரத்தால் ஆன திருமங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும், பெண்கள் மங்கல நாண் மாற்றிக் கொண்டனர். திருக்கல்யாணத்தை அடுத்து கோவிலை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு தாலிக்கயிறும், குங்குமம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாணத்தை நேரடியாக தரிசிக்க, கட்டண தரிசனத்தில் 6 ஆயிரம் பேர், இலவச தரிசனத்தில் 6 ஆயிரம் பேர் என மொத்தம் 12 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக மேற்கு ஆடி வீதியில் 700 அடி நீளத்திற்கும், வடக்கு ஆடி வீதியில் சுமார் 700 அடி நீளத்திற்கும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. மேலும், திருக்கல்யாணக் காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க வசதியாக சித்திரை வீதிகள் உட்பட 20 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Next Post

தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை...! தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றச்சாட்டு...!

Sun Apr 21 , 2024
தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை. இது அவர் தனது அறிக்கையில்; தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகள். கூட்டணி தர்மத்தோடு, வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்தவர்களுக்கு தேமுதிக சார்பில் பாராட்டுகள். ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் […]

You May Like