அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் காலை செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து அனைத்து பொறுப்புகளிலும் நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்தார். செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீீக்கப்பட்டதால் யாருக்கு பாதிப்பு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறு பக்கம் இபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதிதான் சொங்கோட்டையன் தொகுதியும் இருக்கிறது. எம்ஜிஆரின் விசுவாசியாகவும், ஜெயலலிதாவின் தொண்டனாகவும் அதிமுகவின் ஆலமரமாக செயல்பட்டவர் செங்கோட்டையன். இன்று முதல் அவர் கட்சியில் இல்லை என்பது அதிமுகவில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொண்டர்களுக்கு இது அதிருப்திதான். அதிமுக கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் என்பதை எடுத்துக்காட்டவே இபிஎஸ் இந்த நடவடிக்கை எடுத்துள்ளாரா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஜெயலலிதாவிற்கு பின் இபிஎஸ் என்பதை நிறுவ முயற்சிக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு இபிஎஸ் சமாளித்து அரசியலில் அதிமுகவை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல போகிறார் என்று தொண்டர்கள் கவனித்து வருகிறார்கள். அதிமுக என்ற கட்சியின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து மக்களின் முன்பு அம்பலப்படுத்துவதையே பாஜக விரும்புவதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.



