தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். நாளை முதல் 13-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை 5 டிகிரி உயரும்: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்குஉயர வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று அதிகபட்சம் 65 கி.மீ. வேகத்திலும், வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.