அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா வாங்காது என்ற தெரிவித்ததை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி பிரதமர் டிரம்ப் மற்றும் அமெரிக்காவைப் பார்த்து பயப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் அவரின் பதிவில் “ பிரதமர் மோடி டிரம்பைப் பார்த்து பயப்படுகிறார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவரது கருத்துக்களுக்கு முரணாக இல்லை. இந்தியா ரஷ்யாவின் எண்ணெயை வாங்காது என்று ட்ரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதிக்கிறார். பலமுறை அவமதிக்கப்பட்ட போதிலும் வாழ்த்துச் செய்திகளை தொடர்ந்து அனுப்புகிறது. நிதியமைச்சரின் அமெரிக்க வருகையை ரத்து செய்தது.” என்று பதிவிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று பிரதமர் மோடி தனக்கு உறுதியளித்ததாக கூறினார். மேலும் “அவர் (மோடி) எனது சிறந்த நண்பர். இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை, இன்று அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று அவர் எனக்கு உறுதியளித்தார்; அது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதே காரியத்தைச் செய்ய வைக்கப் போகிறோம்,” என்று அவர் கூறினார்.
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக இந்தியாவின் மீது அமெரிக்காவின் வரிகள்
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா உக்ரைன் போரை மறைமுகமாக ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்கா இந்தியாவின் மீது 50 சதவீத வரிகளை விதித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசாங்கம் தனது முடிவை உறுதியாகப் பாதுகாத்தது, மோடி நிர்வாகம் தேசிய நலனுக்காக நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : UPI-இல் வந்த அசத்தலான அப்டேட்..!! அது என்ன ஃபேமிலி மோட்..? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!



