ஆந்திரப் பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சின்சினடா வசிஷ்டா பாலத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியினர் தங்களது 3 வயது குழந்தையை தனியாக விட்டுவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரின் தகவல்படி, ஆற்றில் குதித்தவர்கள் வேல்பூரு கிராமத்தைச் சேர்ந்த சாய் (29) மற்றும் அவரது மனைவி ஷிரீஷா (28) என்பது தெரியவந்துள்ளது. வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், இந்தத் தம்பதியினர் தங்களது சிறு குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பாலத்திற்கு வந்துள்ளனர். பின்னர், குழந்தையை வாகனத்திலேயே விட்டுவிட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள கோதாவரி ஆற்றில் இருவரும் குதித்துள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில், இருட்டிலும் குளிரிலும் தவித்த அந்த 3 வயதுக் குழந்தை, “அம்மா… நான்னா (அப்பா)” என கதறி அழுதுள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள், குழந்தை பாலத்தில் தனியாக அழுதுகொண்டிருப்பதைக் கவனித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையை மீட்டுப் பாதுகாப்பாக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், அங்கிருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். ஆற்றில் குதித்த தம்பதியினரை தேடும் பணியில் காவல்துறையினர், உள்ளூர் மீட்புப் படையினர், நீச்சல் வீரர்கள் மற்றும் படகு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கணவர் சாய் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். சில காலங்கள் வளைகுடா நாட்டில் வேலை செய்துவிட்டு ஆந்திரா திரும்பியுள்ளார். இவர்களுக்கு அதிகளவில் கடன் இருந்ததாகவும், நிதி நெருக்கடி காரணமாகத் தங்களது வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கடன் தொல்லையே இவர்களது விபரீத முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், நிதி நெருக்கடி மட்டுமே இதற்கு முழுக்காரணமா என்பதை காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



