நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் நாடே விழாக்கோளம் பூண்டுள்ளது. பணிக்காக நகரங்களில் தங்கியவர்கள் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த திவ்யா(33) தனது கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே ஒரு ஆம்னி பேருந்து சென்றுள்ளது. திடீரென எதிர்பாராத விதமாக அவர்களின் இருசக்கர வாகனத்தில் ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்தப் பெண் கணவன், குழந்தைகள் கண்முன்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காயமடைந்த திவ்யாவின் கணவர், 2 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்து, பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் கணவன், குழந்தைகள் கண் முன்னரே சென்னை பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



