ஆந்திராவின் குண்டூரில் பரவும் மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் – பா.ஜ., – ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு குண்டூர் மாவட்டத்தில் உள்ள துரகபாலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மர்ம நோய் பரவி வருகிறது. இரு மாதங்களில் மட்டும் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவ முகாம் இதைத் தொடர்ந்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கையில், துரகபாலம் கிராமத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து வருவதை அடுத்து, அங்கு சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கவும் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
வார இறுதி நாட்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தி, தேவையான மருத்துவ உதவிகள் வழ ங்க வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்களின் உதவியையும், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் நாடலாம். தேவையெனில் சர்வதேச நிபுணர்களிடமும் கலந்தாலோசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம், மர்ம நோயால், புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காய்ச்சல், இருமல், நிமோனியா மற்றும் தோல் அலர்ஜியை பரப்பும் ‘மெலியோய்டோசிஸ் வைரஸ்’ பரவலே இதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.