தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, தினசரி 3 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்த ஆலோசனை கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக சார்பில் சிந்தனை அமர்வு கூட்டம் சென்னையில் கடந்த 17-ம் தேதி நடந்தது. இதற்கு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை, பொன்.ராதா கிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், மாநில துணை தலைவர்கள் டால்பின் ஸ்ரீதர், கரு.நாகராஜன், குஷ்பு, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட மூத்த நிர்வாகிகள், அணிப்பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தலை எதிர்கொள்வது, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஒருங்கிணைத்து செல்வது குறித்த பல்வேறு ஆலோசனைகளை மூத்த தலைவர்கள் வழங்கினர். வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியை பலப்படுத்தும் நோக்கிலும், பொது மக்களை சந்திக்கும் நோக்கிலும் தமிழகம் முழுதும் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த யாத்திரையை திறம்பட நடத்தி, இதனை வெற்றி யாத்திரையாக நடத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. யாத்திரை இனிதே சிறப்பாக நடந்திட, மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்கள் தலைமையில் 9 பேர் கொண்ட மாநிலக் குழு அமைக்கப்பட்டுள்ளது.