அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணம் என்று வந்து விட்டால் எப்போதுமே முகத்தில் ஒரு தனி கலை வந்துவிடும். பார்ப்பவர்கள் எல்லாரும் என்ன? முகத்தில் திருமணக்கலை தாண்டவம் ஆடுகிறது என்று கேட்டுச் செல்வார்கள்.
அப்படி ஒரு முகக் கலையோடு மணமக்கள் இருப்பது அவர்களுடைய மனமகிழ்ச்சியை காட்டும்.
திருமணம் என்று வந்து விட்டாலே எல்லோருக்கும் அவரவருக்கென்று சில தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்புகள், ஆசைகள் என்று அனைத்தும் இருக்கும்.அப்படி பலவித எதிர்பார்ப்புடன் புதிய வாழ்வை தொடங்க காத்திருக்கும் மணமக்களுக்கு எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால்?
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கின்ற பாதாயிக்கர பகுதியை சேர்ந்த முஸ்தபா, சீனத் என்ற தம்பதியரின் மகள் பாத்திமா பதூல்(19). இவருக்கும், மூர்க்கநாடு என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சென்ற சனிக்கிழமை அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த சூழ்நிலையில்தான் திருமணத்திற்கு முந்தைய நாளான சென்ற வெள்ளிக்கிழமை மணப்பெண்ணின் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி மயிலாஞ்சி திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய ஆடை, அணிகலன்களை அணிந்து கொண்டு, புதிய வாழ்க்கையில் நுழைய போகும் மகிழ்ச்சியுடன், தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். மணப்பெண் பாத்திமா. அந்த சமயத்தில் திடீரென்று அவர் மயங்கி கீழே சரிந்தார். இதனைக் கண்ட பெண் வீட்டார்கள் பயந்து போய், உடனடியாக அந்த மணப்பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த மருத்துவமனையில், பாத்திமாவுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவ சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே, அவர் மயக்க நிலையிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்ததாவது, சத்தம் இல்லாமல் வந்த நெஞ்சு வலியால் தான் அந்த பெண் உயிரிழந்ததாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அந்த இளம் பெண்ணின் உடல் மலப்புரம் மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கே நடத்தப்பட்ட பரிசோதனையில், நெஞ்சுவலி தான் அவருடைய உயிரிழப்புக்கு காரணம் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும், முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பாரன்சிக் அறிக்கை உள்ளிட்டவை வந்த பிறகு தான் இது தொடர்பான முழுமையான விவரத்தை சொல்ல முடியும் என்றும், தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது