உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மேட்ரிமோனியல் (Matrimony) தளத்தில் போலி விவரங்களைப் பதிவிட்டு ரூ.1.6 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, மோசடியில் ஈடுபட்ட தம்பதியில், ஆண் ஜார்கண்ட்டைச் சேர்ந்த பப்லு குமார் என்றும், பெண் பீகாரைச் சேர்ந்த பூஜா குமாரி என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள், இருவரும் இந்த மோசடி மூலம் சுமார் 35 பேரை ஏமாற்றி ரூ.1,63,83,000 சம்பாதித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடி சம்பவம் குறித்துப் பேசிய டிஎஸ்பி அனுப் குமார், ”தன்னுடைய மகளிடம் திருமணம் செய்து தருவதாகக் கூறி சுமார் ரூ.27 லட்சத்தை ஒருவர் மோசடி செய்ததாக, மொராதாபாத் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.

பின்னர் இதுகுறித்து விசாரிக்க சிவில் லைன்ஸ் காவல் நிலையம் மற்றும் சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணை முடிவில் இது சம்பந்தமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், மேட்ரிமோனியல் தளங்களில் சுயவிவரங்களை போலியாகப் பதிவிடுவார்கள். யாரேனும் அவர்களை தொடர்பு கொண்டால், அவர்களிடம் பணம் கேட்பார்கள். இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, இந்த இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 35 பேரை ஏமாற்றி ரூ.1,63,83,000 மோசடி செய்துள்ளனர். விரைவில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.