கடன் தொல்லையால் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஆட்டோ ஒட்டுநர் தியாகராஜன், அவரது மனைவி செல்வி, மகள் மற்றும் மகன் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், தியாகராஜனுக்கு கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்சனை காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு முதல் காலை வரை ஆட்டோ ஒட்டுநரின் குடும்பத்தினர் யாரும் வீட்டை விட்டு வெளியே வரததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னலை திறந்து பார்த்தபோது 4 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.