மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் இவர் ‘Skylord’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்தார். இவருடைய சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 1.64 மில்லியன் பேர் இவரது ‘ஸ்கைலார்டு’ சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இந்நிலையில், அபியுதய் மிஸ்ரா போபாலில் இருந்து 122 கி.மீ. தொலைவில் உள்ள சோஹாக்பூர் அருகே மாநில நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரது பைக் மீது லாரி ஒன்று மோதியுள்ளது. இந்த சாலை விபத்தில் சிக்கி அபியுதய் மிஸ்ரா உயிரிழந்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மறைவு செய்தியை அறிந்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.