நேபாளத்தில் போடேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ரசுவா, நுவாகோட், தாடிங், கோர்கா மற்றும் சித்வான் ஆகிய 5 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் குடிநீர் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், மொத்தம் 7,570 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,253 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளன; 6,317 வீடுகள் மிகக் பலத்த சேதமடைந்துள்ளன. தனியார் வீடுகளுக்கு மட்டும் சுமார் 17.31 பில்லியன் நேபாள ரூபாய் (1,731 கோடி) வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. 45 அரசு அலுவலகக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, இதற்கான முதற்கட்ட இழப்பு 4.5 பில்லியன் நேபாள ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்: நுவாகோட், இங்கு அதிகபட்சமாக 3,977 வீடுகள் சேதமடைந்துள்ளன (இழப்பு: 9.22 பில்லியன் நேபாள ரூபாய்).
ரசுவா: 1,779 வீடுகள் சேதமடைந்துள்ளன (இழப்பு: 5.07 பில்லியன் நேபாள ரூபாய்).
தாடிங்: 1,451 வீடுகள் சேதமடைந்துள்ளன (இழப்பு: 2.40 பில்லியன் நேபாள ரூபாய்).
கோர்கா & சித்வான்: கோர்காவில் 263 வீடுகளும், சித்வானில் 100 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம்:
தேசிய சாலைக் கட்டமைப்புகளுக்கு சுமார் 30 பில்லியன் நேபாள ரூபாய் அளவுக்குப் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.
கல்ச்சி-சியாப்ருபேசி-ரசுவாகதி சாலையின் 82 கி.மீ தொலைவில் 40 கி.மீ பகுதி முழுமையாக அழிந்துள்ளது.
வெள்ளத்தில் 31 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், 53 தொங்கு பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதில் 33 பாலங்கள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை மீண்டும் கட்டி எழுப்ப சுமார் 50 பில்லியன் நேபாள ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குடிநீர் மற்றும் உள்நாட்டுக் கட்டமைப்பு:
நுவாகோட், ரசுவா, தாடிங் மற்றும் கோர்கா மாவட்டங்களில் குடிநீர் தொட்டிகள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு 640 மில்லியன் நேபாள ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்காலிகப் போக்குவரத்துக்காக ரசுவா மற்றும் நுவாகோட் பகுதிகளில் ‘ரோப்வே’ (Ropeway) வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நுவாகோட்டில் தற்காலிக ஏற்பாடுகள் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
முழுமையான உள்கட்டமைப்புகளை மறுசீரமைத்து, குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதிகளை மீண்டும் நிலைநிறுத்த சுமார் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.



