National Testing Agency (NTA) நடத்தும் NEET UG 2026 தேர்விற்கான நுழைவுச் சீட்டுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், National Testing Agency-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் தங்களது ஹால் டிக்கெட்டுகளை தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மே 3, 2026 அன்று நடைபெற உள்ள இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஒரு வாரம் முன்பாகவே இந்த அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்குள் நுழைய இந்த ஹால் டிக்கெட் கட்டாயமான ஆவணமாகும். இதில் விண்ணப்ப எண், தேர்வு மைய முகவரி, தேர்வு நகரம், வருகை நேரம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய, முதலில் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று “NEET UG 2026 Admit Card” என்ற இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி (அல்லது கடவுச்சொல்) உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு, கேப்ட்சா நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்தவுடன், அதில் உள்ள விவரங்களை கவனமாகச் சரிபார்க்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். பெயர், பிறந்த தேதி, தேர்வு மையம், மொழி, புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக NTA உதவி மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
தேர்வு நாளில் மாணவர்கள் அச்சிடப்பட்ட ஹால் டிக்கெட், செல்லுபடியாகும் அடையாள அட்டை (ஆதார்/பான்/கடவுச்சீட்டு) மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வர வேண்டும். மின்னணு சாதனங்கள், உலோகப் பொருட்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அனைத்தும் தேர்வு மையத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், போலி இணையதளங்கள் மற்றும் ஃபிஷிங் மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு NTA மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ வலைதளத்தை மட்டுமே பயன்படுத்தி தகவல்களைப் பெறவும், உள்நுழைவு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தையே தொடர்ந்து பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: 100க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்.. NIA விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு..!



