தமிழக சட்டமன்றத்தில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது, வீடு கட்டும் திட்டங்களின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தவறுகளை ஒப்புக்கொண்டதற்காக பெரியசாமிக்கு நன்றி தெரிவித்ததுடன், எந்த ஒரு குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் பேச வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், முந்தைய ஆட்சியின் நிர்வாகக் குளறுபடிகள் குறித்த ஆய்வறிக்கைகள் அனைத்தும் தமது அலுவலகக் கோப்புகளில் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அந்த ஆதாரங்களை எப்போது பயன்படுத்த வேண்டுமோ அப்போது உரிய முறையில் வெளிக்கொணர்வதாகவும், எதிர்வரும் இடைத்தேர்தலை மனதில் கொண்டே தற்போதைக்கு அமைதி காப்பதாகவும் எச்சரிக்கும் வகையில் பேசினார்.
அவர் பேசியதாவது, முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்த அறிக்கை என் மேஜையில் உள்ளது. கோப்புகள் என்னிடம் இருப்பதாக நிதியமைச்சர் கூறியிருந்தார். அது உண்மை தான். ஆதாரங்கள் அனைத்தும் என் மேஜையில் தான் உள்ளது. அந்த கோப்புகளை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள், எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்போம். மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும், பேசிவிட்டு தான் வந்துள்ளேன். நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தொகுதி மக்களின் அன்பினாலும் ஆதரவினாலுமே தாம் தொடர்ச்சியாக ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதாகப் பெரியசாமி இதற்குப் பதிலளித்தார்.



