நேபாளத்தில் பசுபதிநாத் கோவிலுக்கு சென்றிருந்த இந்திய யாத்திரிகர்கள் குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 முக்கிய தளங்களை முடக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, நேபாளில் இளம் தலைமுறை இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இதனால் நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடந்த நிலையில் அவை வன்முறையாக மாறியது.. இதன் விளைவாக குறைந்தது 19 பேர் இறந்தனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து நேபாள அரசு சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.
ஆனால் நேபாளத்தில் உள்ள ஊழல் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். ஊழல் மற்றும் கடுமையான நிர்வாகத்திற்காக பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்த நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்தது.
நேபாளத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக, இந்தியர்கள் நேபாளத்திற்கு பயணம் செய்வதை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுள்ளது.. இதனிடையே, நேபாளத்தில் பசுபதிநாத் கோவிலுக்கு சென்றிருந்த இந்திய யாத்திரிகர்கள் குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச எண் கொண்ட பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பேருந்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பயணிகளிடம் இருந்து பணப்பைகள், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர். இதில் ஆந்திராவைச் சேர்ந்த பலர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் நேபாள ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேதமடைந்த பேருந்து வியாழக்கிழமை மாலை உத்தரபிரதேசம், மகாராஜ்கஞ்ச் அருகிலுள்ள சோனாலி எல்லையை அடைந்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “சுமார் 200 தெலுங்கு மக்கள் நேபாளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்” என்று கூறினார்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக உத்தரபிரதேசம் , பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுடன் எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் . எல்லையில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் அல்லது சட்டவிரோத நடமாட்டங்களைத் தடுக்க எல்லையோர மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.