வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் சமர்ப்பிக்கப்படும் இந்திய குடிமக்களின் ஆவணங்களை சரிபார்த்து சான்றளிப்பதற்காக தேசிய தகவல் மையத்துடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் இ-சனத் என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை அலுவலகத் தலைவர்; இந்தத்தளத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி விளக்கினார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு இணையவழியில், முகமற்ற, பணமில்லா மற்றும் காகிதமில்லா ஆவண சரிபார்ப்பு/சான்றளிப்பு ஆகியவற்றிற்கான மையப்படுத்தப்பட்ட சேவையை வழங்குவது இ-சனத் தளத்தின் நோக்கமாகும்.
https://esanad.nic.in/register என்ற தளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம். பதிவு செய்த பிறகு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களை டிஜிட்டல் களஞ்சியத்திலிருந்து நேரடியாகவோ, ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை பதிவேற்றம் செய்தோ தளத்தில் பதிவிடலாம். ஆவணங்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. இந்த சரிபார்ப்பைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் 7 வேலை நாட்களுக்குள் டிஜிட்டல் சான்றளிப்பை வெளியிடுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிகழ்நேர நிலையை இணையவழியில் கண்காணிக்கலாம்.
https://esanad.nic.in/eregister என்ற இணைப்பைப் பயன்படுத்தி டிஜிட்டல் ஆவணங்கள் அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்ட சான்றிதழ்களை வெளிநாட்டு துறைகளும் அதிகாரிகளும் சரி பார்த்துக் கொள்ள முடியும், இது இந்த இ-சனத் தளத்தின் மிக முக்கியமான அம்சமாகும். மறு சான்றளிப்பு தேவையில்லாத சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் 114 ஹேக் மாநாட்டு நாடுகளால் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.



