வாழ்க்கை முழுவதும் துணையாக இருந்த மனைவி உயிரிழந்த நிலையில், அவரது உடலை மயானத்துக்குக் கொண்டு செல்லக்கூட வழியின்றித் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற முதியவரின் பரிதாப நிலை பீகாரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச்சடங்குக்குத் தேவையான செலவைக்கூடச் சமாளிக்க முடியாத அளவுக்கு வறுமையில் வாடிய அவருக்கு, அப்பகுதி வார்டு உறுப்பினர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தின் ஜாஜா ரயில்வே காலனியில் வசித்து வருபவர் 60 வயதான சிவகுமார் தாஸ். இவரது மனைவி ராகி தேவியும் 60 வயதுடையவர். உறவினர்களின் ஆதரவின்றி வறுமையான சூழலில் வாழ்ந்து வந்த இந்தத் தம்பதிக்கு, ராகி தேவியின் மரணம் பேரிடியாக அமைந்தது.
உடல்நலக்குறைவால் மனைவி உயிரிழந்ததும், அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் சிவகுமார் தாஸ் இறங்கினார். ஆனால், சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் அல்லது நகராட்சி வாகனம் கிடைக்கவில்லை. தனியார் வாகனத்துக்கு வாடகை கொடுக்கவும் அவரிடம் பணம் இல்லை. மனைவியின் உடலை வீட்டிலேயே வைத்திருக்க முடியாத சூழலில், உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் பழைய தள்ளுவண்டி ஒன்றை ஏற்பாடு செய்தார்.
பின்னர், அந்த வண்டியில் மனைவியின் உடலைக் கிடத்தி, அவரே தள்ளிக்கொண்டு மயானத்துக்குச் சென்றார். தள்ளுவண்டியில் மனைவியின் உடலை எடுத்துச் சென்ற முதியவரின் நிலையைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேதனையடைந்தனர்.
இதற்கிடையே, இறுதிச்சடங்குக்குத் தேவையான விறகுகளை வாங்கக்கூடப் பணம் இல்லாமல் சிவகுமார் தாஸ் தவித்தார். அவரது நிலையை அறிந்த வார்டு உறுப்பினர், தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.2,000 வழங்கினார். இதையடுத்து, கிடைத்த உதவியைக் கொண்டு மனைவியின் உடலை எளிமையாக அடக்கம் செய்தார்.
ஏழைக் குடும்பங்களின் இறுதிச்சடங்குச் செலவுகளுக்காக பீகார் அரசின் சார்பில் ‘கபீர் அந்த்யேஷ்டி மானியம்’ உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இருப்பினும், கணவரின் கண் முன்னே மனைவி உயிரிழந்த நிலையில், அவரது உடலை எடுத்துச் செல்லக்கூட அரசு சார்ந்த உதவி உடனடியாகக் கிடைக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையில் தவிக்கும் மக்களுக்கு இறுதிச்சடங்கு போன்ற இக்கட்டான நேரங்களில்கூட அடிப்படை உதவிகள் கிடைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
Also Read: 3 நாட்கள் காவல் நிலையத்தில் சித்ரவதை?.. ஜாமீனில் வந்த இளைஞர் தற்கொலை!



