வருமான வரி மசோதா, 2025 தற்போதுள்ள வரி விகிதங்களில், குறிப்பாக நீண்டகால மூலதன லாப வரி (Long-Term Capital Gains – LTCG) தொடர்பான வரி விகிதங்களில் எந்தவித மாற்றங்களும் முன்மொழியப்படவில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
நிதி ஆண்டிற்கான புதிய வரி விதிகள் படி, 2025-26 ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில், நீண்டகால லாபங்களுக்கு (LTCG) சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உங்கள் நீண்டகால முதலீட்டிற்கு இப்பொழுது ரூ.1.25 லட்சம் வரை விலக்கு பெறலாம்.
LTCG என்றால் என்ன? நீங்கள் ஒரு சொத்தை (பங்கு, மியூச்சுவல் ஃபண்ட், வீடு, நிலம், தங்கம் போன்றவை) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேலாக வைத்திருந்து விற்றால், அதிலிருந்து கிடைக்கும் லாபம் “நீண்டகால மூலதன லாபம்” (Long-Term Capital Gain – LTCG) என்று அழைக்கப்படுகிறது.
2025 முதல் மாற்றப்பட்ட முக்கிய அம்சங்கள்: முதலாவது, பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற பட்டியலிடப்பட்ட சொத்துகளில் இருந்து வரும் லாபங்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.25 லட்சம் வரையிலான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முன்னர் இது ரூ.1 லட்சமாக இருந்தது.
இரண்டாவது, இந்த விலக்கு வரம்பை கடந்த லாப தொகைக்கு, 12.5% என்ற புதிய வரிவிகிதம் விதிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுகளின் 10% விகிதத்தைவிட அதிகமாகும். மூன்றாவது, எப்போது ஒரு சொத்தை விற்பது LTCG ஆகும் என்பதை தீர்மானிக்கக்கூடிய “ஹோல்டிங் காலம்” (holding period) – அதாவது நீங்கள் அந்த சொத்தை எவ்வளவு காலம் வைத்திருந்தீர்கள் என்பதைப் பொருத்தது.
பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு குறைந்தபட்சம் 1 வருடம் வைத்திருக்க வேண்டும். வீடு மற்றும் நிலத்திற்கு 2 ஆண்டுகள், தங்கம் மற்றும் பத்திரங்களுக்கு 3 ஆண்டுகள் வைத்திருந்தால் மட்டுமே அது LTCG ஆகும்.
2025-ஆம் ஆண்டுக்கான ITR தாக்கலில், LTCG சம்பந்தமான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. முக்கியமாக, வரிவிலக்கு ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, ஆனால் அதன் மேல் வரிவிகிதம் 12.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வருமான வரி மசோதா, 2025 தற்போதுள்ள வரி விகிதங்களில், குறிப்பாக நீண்டகால மூலதன லாப வரி (Long-Term Capital Gains – LTCG) தொடர்பான வரி விகிதங்களில் எந்தவித மாற்றங்களும் முன்மொழியப்படவில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை X தளத்தில் வெளியிட்ட பதிவில், “வருமான வரி மசோதா, 2025” என்பது மொழியை எளிமைப்படுத்துதல் மற்றும் தேவையற்ற அல்லது காலம் கடந்த விதிகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்டது. வரி விகிதங்களை மாற்றும் நோக்கம் இதில் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஏதேனும் தெளிவின்மை இருந்தால், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படும் போது அது தீர்க்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மாற்றுவதற்கான வரைவுச் சட்டம் கடந்த பிப்ரவரியில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, விரிவான ஆய்வுக்காக ஒரு தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு, கடந்த ஜூலை 21ம் தேதி 285 பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
இதில், தற்போதைய சட்டத் தேவைகளை வெளிப்படுத்தும் வகையில், “மூலதன சொத்து”, “தாய் நிறுவனங்கள்(parent company) மற்றும் “மைக்ரோ அல்லது சிறு நிறுவனங்கள் சில முக்கியமான வரையறைகளை செய்கின்றன. நிறுவனங்களுக்கு இடையேயான ஈவுத்தொகை விலக்குகள், வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்களில் கட்டுமானத்திற்கு முந்தைய வட்டி மற்றும் நகராட்சி வரிகளுக்கான நிலையான விலக்குகள் போன்ற சில விலக்குகளை மீட்டெடுப்பதையும் குழு முன்மொழிந்துள்ளது.
மேலும், இந்த குழு, சட்டத்தை எளிதாகப் பின்பற்றும் நோக்கில், சில நிவாரணங்களை முன்மொழிந்துள்ளது. அதில்,சிறிய வரி செலுத்துவோரால் விருப்பமில்லாமல் ஏற்பட்ட தவறுகளுக்கான அபராதங்கள் நீக்கப்பட வேண்டும், தாமதமாக தாக்கல் செய்யும் வரி கணக்கீட்டாளர்களுக்கும் பணத்தைத் திரும்பப் பெறும் (refund) உரிமை வழங்கப்பட வேண்டும், தொண்டு நிறுவனங்களுக்கு தொடர்பான “மனதளவில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும்” விதி (deemed application clause) மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். புதிய வரி நெறிமுறையை (new code) மேலும் ஒழுங்கமைக்கப்பட்டதாக்கவும், வழக்குப் பரப்புகளுக்கு எதிரானதாக்கவும், 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் உள்ள மீதமுள்ள குறிப்புகளை (residual references) நீக்க வேண்டும் எனவும் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம், புதிய சட்டம் தெளிவாகவும், நடைமுறையில் சிக்கல் ஏற்படாதவகையிலும் செயல்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி அமைச்சகம் பெரும்பாலான பரிந்துரைகளை இறுதி மசோதாவில் சேர்க்கவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது, நடந்துக்கொண்டிருக்கும் மழைக்கால கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது. இயற்றப்பட்டதும், புதிய சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும், இது நவீனமயமாக்கப்பட்ட மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வரி அமைப்பை அறிமுகப்படுத்தும்.