மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு சப்ளையில் சிக்கல் எழுந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு எல்.பி.ஜி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு முதல்முறையாக பொதுத்துறை மற்றும் தனியார் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அதிகபட்ச உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 13 அன்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, நாட்டில் உள்ள 21 சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த இலக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து ஆலைகளும் இணைந்து தினமும் 63,810 டன்கள் வரை எல்.பி.ஜி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தற்போதைய தினசரி சமையல் எரிவாயு பயன்பாட்டில் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவாகும். விநியோகத்தில் பற்றாக்குறை அல்லது தடை ஏற்படும் போதெல்லாம் இந்த உற்பத்தி வரம்புகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒதுக்கீடு:
இந்த புதிய உத்தரவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் இயக்கப்படும் 18 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நாளொன்றுக்கு மொத்தம் 31,470 டன் எல்பிஜி உற்பத்தி இலக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக தினமும் 18,000 டன்கள் எல்.பி.ஜி உற்பத்தி செய்ய இலக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பி.பி.சி.எல் (BPCL) கொச்சி சுத்திகரிப்பு ஆலைக்கு தினமும் 4,800 டன்களும், நயாரா எனர்ஜி (Nayara Energy) நிறுவனத்திற்கு 4,480 டன்களும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓ.என்.ஜி.சி (ONGC) மற்றும் கெயில் (GAIL) போன்ற இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து தினமும் 6,460 டன்கள் எல்.பி.ஜி உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியா பயன்படுத்திய 33.2 மில்லியன் டன் எல்.பி.ஜி-யில் 64 சதவீதத்திற்கும் மேல் (சுமார் 21.3 மில்லியன் டன்) வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டது. ஈரான் போர் காரணமாக சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடல்வழியாக எரிவாயு கொண்டுவரும் ஹார்முஸ் நீரிணைப் பாதை பாதிக்கப்பட்டபோது, இந்தியாவிற்கு கடும் இறக்குமதி பற்றாக்குறை ஏற்பட்டது. அதன்பின்னரே எதிர்காலத்தில் இதுபோன்ற விநியோகத் தடைகள் ஏற்படும் போது உள்நாட்டு நுகர்வோருக்கு சிலிண்டர் தட்டுப்பாடு வராமல் தடுக்க இந்த நிரந்தர உற்பத்தி இலக்கு அமைப்பை அரசு உருவாக்கியுள்ளது.
அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் உற்பத்தி செய்யப்படும் எல்.பி.ஜி-யை முறையாகச் சேமிக்கவும், ரயில் மற்றும் சாலை டேங்கர்கள் மூலம் விரைவாக விநியோகிக்கவும் தேவையான உள்கட்டமைப்பை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பெட்ரோ கெமிக்கல் உற்பத்திக்கு பயன்படும் பொருட்களை எல்.பி.ஜி உற்பத்திக்காகப் திருப்பி விடுவது மற்றும் நவீன தொழில்நுட்பங்களை உடனடியாகப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை ஆலைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த உற்பத்தி இலக்குகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.



