தமிழகத்தை பொறுத்த வரை ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலில் தெரிவித்துள்ளார்.. இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய முதல்வர் இந்த தகவலை தெரிவித்தார்.. மேலும் திமுகவும், காங்கிரஸும் இணைந்து தான் தேர்தலை சந்திக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.. அரசியலை தாண்டி ராகுல்காந்தி தனது சகோதரர் போன்றவர் என்று முதல்வர் தெரிவித்தார்.. மேலும் “ ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தற்போது எழவே இல்லை.. அது சரிவராது என்பது எங்களுக்கும் தெரியும் காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும் எனவும் தெரிவித்தார்..
கூட்டணியில் முறிவை ஏற்படுத்த முடியுமா என்பதற்காக சிலர் காத்திருக்கின்றனர்.. ஆனால் அவர்களின் கனவு நிறைவேறாது..” என்றும் முதல்வர் தெரிவித்தார்..
சட்டமன்ற தேர்தலில் 200-க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் எனவும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.. எத்தனை கூட்டணி வைத்தாலும், திமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும்.. கூட்டணி கட்சி குழப்பத்தை ஏற்படுத்தவே இந்த தேர்தல் கடினமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். 2021 தேர்தலை விட 2026 தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்..” என்று தெரிவித்தார்..
கடந்த சில மாதங்களாகவே திமுக – காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கரூரில் துயர சம்பவத்திற்கு பின் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டது.. ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியதே இதற்கு காரணம்.. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸின் சில மூத்த தலைவர்களிடையே ஒலிக்கிறது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் தவெகவை அணுகலாம் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை காங்கிரஸ் அமைத்தது.. இதனால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எனினும் இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிக தொகுதிகளை வழங்காத பட்சத்தில் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.. இதற்கு திமுக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..



