அசாம் மாநிலம் நுமாலிகர் பகுதியில், காட்டு யானை ஒன்றின் கழுத்தில் மிகப்பெரிய டிராக்டர் டயர் மாட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் சுற்றிக் கொண்டிருந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்த யானையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தனர்.
வீடியோ வைரலான சில மணி நேரங்களிலேயே வனத்துறையினரும், வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையமும் (CWRC) இணைந்து உடனடியாகச் செயல்பட்டனர். யானையின் கழுத்தில் இருந்த டிராக்டர் டயரை பாதுகாப்பாக அகற்றி, அதை மீண்டும் தனது கூட்டத்துடன் இணைய வைத்தனர்.
இதுகுறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில், “மனிதராக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி, அசாமில் யாரும் துயரத்தில் இருக்கக் கூடாது. நுமாலிகரில் யானையின் கழுத்தில் சிக்கியிருந்த டயர் அதன் உயிருக்கே பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து டயரை அகற்றி, அதன் உயிரைக் காப்பாற்றி கூட்டத்தோடு சேர்த்துள்ளோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
வீடியோக்கள் பரவிய சில மணி நேரங்களிலேயே விரைவாகச் செயல்பட்டு யானையைக் காப்பாற்றிய வனத்துறை மற்றும் CWRC குழுவினருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆபத்தை உணர்ந்து சரியான நேரத்தில் செயல்பட்ட மீட்புக் குழுவினரின் இந்த விரைவு நடவடிக்கை குறித்துப் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.



