90s கிட்ஸ் கையில் தவழ்ந்த Nokia, BlackBerry..!! இந்த நிறுவனங்கள் இப்போ என்ன பண்றாங்க தெரியுமா..?

Nokia 2026

தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு காலத்தில் உலகையே கட்டி ஆண்ட சில பிராண்டுகளின் பெயர்களை இன்றும் நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. சட்டை பையில் நோக்கியா, அலுவலக மேசையில் பிளாக்பெர்ரி, வீட்டு வரவேற்பறையில் ஐபிஎம் கணினி என 90-களின் இறுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் அசைக்க முடியாத சாம்ராஜ்யங்களாக திகழ்ந்தவை இவை.


ஆனால், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் அலை சுழன்றடித்தபோது, இந்த ஜாம்பவான்கள் சந்தையில் இருந்து முழுமையாக துடைத்தெறியப்பட்டுவிட்டதாகவே பெரும்பாலான மக்கள் இன்றும் கருதுகின்றனர். உண்மையில் அவர்கள் காணாமல் போகவில்லை; மாறாக, காலத்தின் மாற்றத்தை புரிந்துகொண்டு திரைமறைவில் உலகை இயக்கும் புதிய தளங்களுக்கு விஸ்வரூப மாற்றம் அடைந்துள்ளனர்.

அலுவலகவாசிகளின் தவிர்க்க முடியாத அடையாளமாக இருந்த பிளாக்பெர்ரி (BlackBerry), தனது கைபேசி தயாரிப்பை 2016-ல் முழுமையாக நிறுத்தியது. ஆனால், இன்று நவீன சொகுசுக் கார்களில் இயங்கும் ‘QNX’ மென்பொருள் தளம் மற்றும் சர்வதேச அரசுகளின் பாதுகாப்பு தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு பின்னால் பிளாக்பெர்ரியின் தொழில்நுட்பமே பிரதானமாக இயங்கி வருகிறது.

இதேபோல், செல்போன் சந்தையின் முடிசூடா மன்னனாக விளங்கிய நோக்கியா (Nokia), மொபைல் தயாரிப்பை கைவிட்டாலும், இன்று செல்போன் கோபுரங்கள், 5G நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) பிரம்மாண்ட டேட்டா சென்டர்களை இணைக்கும் அதிவேக தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது. இதன் பலனாக, AI மற்றும் கிளவுட் வாடிக்கையாளர்கள் மூலமான நோக்கியாவின் வர்த்தகம் ஒரே ஆண்டில் 49 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

தொலைத்தொடர்புச் சந்தையின் முன்னோடியான எரிக்சன் (Ericsson), செல்போன் தயாரிப்பில் ஏற்பட்ட இழப்புகளுக்குப் பிறகு 5G மற்றும் எதிர்கால 6G கட்டமைப்புக்கான மென்பொருள் பணிகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. பர்சனல் கம்ப்யூட்டர் சந்தையை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஐபிஎம் (IBM), கணினி தயாரிப்பை லெனோவாவுக்கு விற்றுவிட்டு, கிளவுட் கம்ப்யூட்டிங், ரெட் ஹாட் (Red Hat) மென்பொருள் மற்றும் வணிக ஏஐ (Enterprise AI) தொழில்நுட்பங்களில் தடம் பதித்து மெகா லாபத்தை ஈட்டி வருகிறது. மேலும், ஆரம்பகால ஆண்ட்ராய்டு போன் தயாரிப்பாளரான ஹெச்டிசி (HTC) மெய்நிகர் உலகம் (VR) மற்றும் செயற்கை நுண்ணறிவு சாதனங்களிலும், மடிக்கணினி தயாரிப்பில் கோலோச்சிய ஜப்பானின் தோஷிபா (Toshiba) செமிகண்டக்டர் மற்றும் மின்சக்தி தீர்வுகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்தப் பெருநிறுவனங்களின் மறுபயணம் ஒட்டுமொத்த வணிக உலகிற்கும் ஒரு தெளிவான பாடத்தை உணர்த்துகிறது. நேற்றைய மகத்தான வெற்றியே நாளைய வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் தந்துவிடாது. வாடிக்கையாளர்களின் தேவைகளும் தொழில்நுட்பப் போக்கும் மாறும்போது, ஈகோ பார்க்காமல் பழைய முகங்களை உதறிவிட்டு மாற்றத்தைத் தழுவும் நிறுவனங்கள் மட்டுமே நீண்ட காலம் நிலைத்து நிற்கும். ஒரு காலத்தில் மக்கள் கைகளில் தவழ்ந்த இந்தப் பெயர்கள், இன்று நேரடியாகத் திரையில் தெரியாவிட்டாலும், டிஜிட்டல் உலகின் முதுகெலும்பாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

Read More : திடீர் பிரேக்..!! அடுத்தடுத்து மோதிய 7 கார்கள்..!! விடுமுறை முடிந்து சென்னை திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

Next Post

சந்தோஷமான திருமண வாழ்வுக்கு விநாயகர் தரும் 5 ரகசியங்கள்..!! புதுமணத் தம்பதிகள் அறிய வேண்டிய சூட்சுமம்..!!

Tue Sep 15 , 2026
திருமண பந்தம் என்பது இரு மனங்கள் இணையும் உன்னதமான பயணம். புதிய வாழ்க்கையைத் தொடங்கும் புதுமணத் தம்பதிகள், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் திருவுருவ அமைப்பிலிருந்தும் வழிபாட்டிலிருந்தும் இல்லறத்தை இனிமையாக்கும் 5 ஆழமான வாழ்வியல் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். கூர்ந்து கவனியுங்கள் (பெரிய காதுகள்): விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் ‘அதிகம் கேட்க வேண்டும்’ என்பதை உணர்த்துகின்றன. தம்பதியரிடையே ஏற்படும் பல முரண்பாடுகளுக்குக் காரணம், துணையின் உணர்வுகளை முழுமையாகக் […]
Marriage 2025

You May Like