நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும்.
தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 289(1) ன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். நகர்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்க இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உணவு விற்பனை கடைகள் தவிர்த்து மற்ற கடைகளுக்கு இது பொருந்தும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
விண்ணப்பதாரர் தங்களது பெயர் மற்றும் தொழில் விவரம், தொழில் நடத்தப்பட உள்ள இடத்தின் முகவரி போன்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.20க்கான முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற்கான திட்டங் களைப் பின்பற்றுவேன் என்பதற்கான உறுதி மொழி பத்திரம் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் தொழில் உரிமம் கிடைக்கும். இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமம் புதுப்பிக்கப் படவில்லையென்றால் புது உரிமம் எடுக்க வேண்டும்.
தங்கும் விடுதிகள் மற்றும் உணவகம் என்றால் குடிநீர் வாய்ப்புகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் என்றால் பணியிடம், கட்டிடம், அதற்கான இதர அனுமதிகள், எத்தனை பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர் என்கிற விவரங்கள் கொடுக்க வேண்டும். தவிர குறிப்பிட்ட தொழிற்சாலை தொடங்குவதற்கான திட்ட வரைபடம் போன்றவை இணைக்க வேண்டும். அந்த இடத்தின் காற்றோட்ட வசதி, தீ தடுப்பு வசதிகள், அறைகள், கட்டிட உயரம் போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொழிற்சாலை ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டவர்களின் குறிப்பின்பேரில் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.