பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் 2025-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் சிறிதளவு அதிகரித்து 55.1 சதவீதமாக உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் சிறிது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 33.7 சதவீதமாக உள்ளது.
இது நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 33.4 சதவீதமாக இருந்தது.15 வயதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை விகிதம் சிறிதளவு அதிகரித்து 2-வது காலாண்டில் 52.2 சதவீதமாக உள்ளது. பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அனைத்து துறைகளிலும் அதிகரித்து சாதனை படைத்து வருகிறது. கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் மற்றும் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.2 சதவீதமான குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 5.4 சதவீதமாக இருந்தது.
வேளாண் துறையில் கிராமப்புற வேலைவாய்ப்பு விகிதம் சற்று அதிகரித்து நடப்பு ஆண்டின் 2-வது காலாண்டில் 57.7 சதவீதமாக உள்ளது. இது ஃகாரிப் பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட வேளாண் நடைமுறைகளில் செயல்பாடுகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு விகிதம் 61.7 சதவீதத்திலிருந்து 62.0 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் சுய தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 62.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



