இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்தமிட்டு விசித்திரமான முறையில் வலம்வந்த வாலிபருக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.5,500 அபராதம் விதித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஆதித்யா சிகர்வார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வியூஸ்களை அள்ளுவதற்காக இவர் ஒரு விசித்திரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். தனது தோழியை கொண்டு வெள்ளை நிற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் மீது சிவப்பு நிற லிப்ஸ்டிக்கால் சுமார் 3,400 முத்தங்களை பதிய வைத்துள்ளார்.
கார் முழுவதும்அடர்ந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக் முத்தக் குறியீடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த வித்தியாசமான கலைப் படைப்பை உருவாக்க அவரது தோழிக்கு சுமார் மூன்றரை மணி நேரம் ஆகியுள்ளது.
போலீசாரிடம் சிக்கிய வைரல் ரீல்ஸ்: இந்த விசித்திரமான காரை சாலையில் ஓட்டியபடியே வீடியோ எடுத்த ஆதித்யா, அதனை ‘கிஸ்ஸிங் கார்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ வெறும் 24 மணி நேரத்திற்குள் 55 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலானது.
இதற்கிடையில், இந்த வீடியோ குவாலியர் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது. வீடியோவில் காரின் பதிவு எண் (MP07 CC 9452) தெளிவாகத் தெரிந்ததை அடுத்து, போலீசார் காரைக் கண்டுபிடித்து தாதிபூர் பகுதியில் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆதித்யாவை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல் நிலைய பொறுப்பாளர் அபிஷேக் ரகுவன்ஷி கூறுகையில், ஆதித்யா தான் செய்த தவறை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். மேலும், காவல் நிலைய வளாகத்திலேயே நின்று காரில் பதிக்கப்பட்டிருந்த அத்தனை லிப்ஸ்டிக் முத்தக் குறியீடுகளையும் தண்ணீரை ஊற்றி அவரே சுத்தமாக துடைத்து அகற்றினார்.
போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக காவல்துறை தரப்பில் அவருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களுக்காகப் பொதுமக்களின் பாதுகாப்பைக் குலைக்கும் அல்லது போக்குவரத்து விதிகளை மீறும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.



