ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில், காட்டுப் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தனது மருமகனுடன் அங்குலின் செண்டிபாடா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றார்.
பிற்பகல் 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இருவரும் வீடு திரும்பும் போது பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் பம்ப் அருகே வாகனத்தை நிறுத்தியுள்ளனர். பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போது, சிறுநீர் கழிப்பதற்காக ஒரு காட்டுப் பகுதிக்குள் பாதிக்கப்பட்ட பெண் நுழைந்துள்ளார். அப்போது டிராக்டரில் வந்த மூவர் அவரை கத்தி முனையில் மிரட்டி, காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் கிடைத்ததும், மாவட்ட எஸ்.பியின் நேரடி மேற்பார்வையில் மூன்று சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. தடயவியல் நிபுணர்கள் மற்றும் நாய் படைகள் உதவியுடன் விரிவான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் 2 சிறார்கள் உட்பட மூவரும் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களின் டிராக்டர், மொபைல் போன்கள், குற்றம் நடந்தபோது அணிந்திருந்த உடைகள் மற்றும் உயிரியல் சான்றுப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கு ‘சிறப்பு அறிக்கை’ மற்றும் ‘சிவப்புக் கொடி’ வழக்காகக் கருதப்பட்டுள்ளதாகவும், 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
குற்றவாளிகளுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த நீதிமன்றத்தை கோருவோம் என்று அங்குல் காவல்துறை தெரிவித்துள்ளது.
Read more: ரூ.4600 கோடி சொத்து! புதிய படங்கள் இல்லை, ஆனால் இந்தியாவின் பணக்கார நடிகை! யார் தெரியுமா?