Ola, Uber, Rapido போன்ற முக்கிய நிறுவனங்களுடன் இணைந்துள்ள ஓட்டுநர்கள், கட்டணக் கொள்கைகளுக்கு எதிரான அதிருப்தியும், அரசின் தொடர்ந்த செயல்பாடின்மையையும் கண்டித்து, பிப்ரவரி 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.
தெலங்கானா ஆப்-அடிப்படையிலான ஓட்டுநர்கள் சங்கம் (TADF), வரும் பிப்ரவரி 3, செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள “அகில இந்திய வேலைநிறுத்தம் (All-India Breakdown)” திட்டமிட்டபடியே நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டம், ஓட்டுநர்கள் எதிர்கொண்டு வரும் அதிகரிக்கும் நிதிச் சுமை மற்றும் நிலையற்ற வேலைச் சூழ்நிலைகள் குறித்து கவனம் ஈர்ப்பதற்காக நடத்தப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன அகரிகேட்டர் வழிகாட்டி விதிகள், 2025 அறிவிக்கப்பட்ட பின்னரும், உபர், ஓலா, ராப்பிடோ போன்ற தளங்கள் வெளிப்படைத்தன்மையின்றி கட்டணங்களை நிர்ணயித்து வருகின்றன என்று அந்த சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நடைமுறைகள் ஓட்டுநர்களை வருமான நிலைத்தன்மையின்மை, கடன் சுமை மற்றும் நிலைத்திருக்க முடியாத வேலைச் சூழ்நிலைக்கு தள்ளுகின்றன என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சர்ஜ் பிரைசிங் (அதிக கட்டண வசூல்) முறைகளால் பயணிகளும் பாதிக்கப்படுவதாக TADF கூறியுள்ளது. போதிய ஒழுங்குமுறை கண்காணிப்பு இல்லாததால், இந்த தளங்கள் பொறுப்புக்கூறல் இன்றி செயல்பட முடிகிறது என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
குறைந்தபட்ச அடிப்படை கட்டணம் மற்றும் கொள்கை மாற்றங்கள் கோரிக்கை
குறைந்தபட்ச அடிப்படை கட்டணத்தை (Minimum Base Fare) இதுவரை அறிவிக்காததற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளை தொழிற்சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. இதனால், நிறுவனங்கள் ஓட்டுநர்களின் வருமானத்தை குறைத்துக் கொண்டே, கமிஷன் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள முடிகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், எரிபொருள் விலை உயர்வு, வாகன பராமரிப்பு செலவுகள், காப்பீட்டு கட்டணங்கள் மற்றும் செயல்பாட்டு அபாயங்கள் அனைத்தும் முழுமையாக ஓட்டுநர்களின் மீது சுமத்தப்படுவதாக TADF கூறியுள்ளது. இதனால், மரியாதைக்குரிய வாழ்க்கையை நடத்துவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
முக்கிய கோரிக்கைகள்
ஓட்டுநர்களின் முக்கிய கோரிக்கைகளில், உடனடியாக குறைந்தபட்ச அடிப்படை கட்டணம் அறிவிக்க வேண்டும், ஆப் மூலம் நடைபெறும் வர்த்தக பயணங்களுக்கு தனியார், வர்த்தகமல்லாத வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் ஆகியவை அடங்கும்..
முந்தைய போராட்டங்களும் தொடரும் பிரச்சனைகளும்
பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தம், கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) மற்றும் புத்தாண்டு முன்னிரவு (டிசம்பர் 31) ஆகிய டெலிவரி சேவைகளுக்கான உச்ச காலங்களில் நடைபெற்ற, கிக் மற்றும் பிளாட்ஃபாரம் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து வருகிறது. அந்த நேரங்களில், வேலைச் சூழ்நிலை மோசமடைந்தது மற்றும் ஊதிய அமைப்புகள் நியாயமற்றதாக உள்ளன என்ற குற்றச்சாட்டுகளை தொழிலாளர்கள் முன்வைத்திருந்தனர்.
அப்போது, வெளிப்படையான ஊதிய அமைப்பு, உண்மையான வேலை நேரம் மற்றும் செலவுகளை பிரதிபலிக்கும் நியாயமான ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், உரிய நடைமுறை இன்றி தன்னிச்சையான ஐடி (ID) தடை மற்றும் அபராதங்கள் விதிப்பதை நிறுத்த வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள், விபத்து காப்பீடு போன்ற பாதுகாப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும், அல்கோரிதம் சார்ந்த பாகுபாடு இல்லாமல் சமமான வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும், எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து மரியாதையான அணுகுமுறை, மேலும் வேலை பாதுகாப்பு, சுகாதார காப்பீடு, விபத்து காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நீண்டகால சமூக பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.



