தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே டேங்கர் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
கோவையில் இருந்து தனியார் ஆமினி பேருந்து ஒன்று நாகர்கோவில் நோக்கி பயணிகளை ஏற்றி வந்துக்கொண்டிருந்தது. கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சிதைந்து சேதமானது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புபடையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டேங்கர் லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக சாலையில் ஒரத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஆம்னி பேருந்து மோதியதே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. லாரி ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



