தற்போது வரை, 28 மாநில / யூனியன் பிரதேச சட்டமன்றங்கள் தேசிய மின்னணு -விதான் விண்ணப்பத்தை (NeVA) செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அவற்றில் 20, ஏற்கனவே என்இவிஏ தளத்தில் இணைந்து முழுமையாக டிஜிட்டல்மயமாக மாறியுள்ளன.நாட்டின் 37 மாநில / யூனியன் பிரதேச சட்டமன்றங்களையும் டிஜிட்டல்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் என்இவிஏ செயல்படுத்தப்படுகிறது.
“ஒரே நாடு, ஒரே பயன்பாடு” என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ், அனைத்து சட்டமன்றங்களும் பயன்படுத்துவதற்கு பொதுவான என்இவிஏ தளத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் உருவாக்கியுள்ளது. பொதுவான பயன்பாட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொள்வது, அனைத்து சட்டமன்றங்களிலும் செயல்முறை தரப்படுத்தலை ஊக்குவிக்கிறது. மேலும், அனைத்து சட்டமன்றங்களையும் ஒரே மாதிரியான அடிப்படை டிஜிட்டல்மயமாக்கலுக்கு கொண்டு வர தேவையான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை அமைச்சகம் வழங்குகிறது.இந்தத் தகவலை நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.



