சாட்ஜிபிடியை உருவாக்கிய OpenAI நிறுவனம், இந்த ஆண்டு இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியா சாட்ஜிபிடி பயன்பாட்டில் இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் வாராந்திர தீவிர பயனாளர்கள் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய மாணவர் பரப்பும், டெவலப்பர் சமூகமும் இந்தியாவில்தான் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அமைக்கப்படும் அலுவலகம், இந்திய அரசின் “India AI Mission” திட்டத்திற்கு ஆதரவாக செயல்படும். மேலும், உள்ளூர் டெவலப்பர்கள், வர்த்தகங்கள், கல்வி நிறுவனங்களுடன் OpenAI கூட்டாண்மையை வலுப்படுத்தும். நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு, உள்ளூர் குழு நியமனங்கள் தொடங்கியுள்ளதையும் உறுதி செய்துள்ளது.
OpenAI தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் கூறுகையில், “இந்தியாவில் ஏஐ குறித்த ஆர்வமும் வாய்ப்பும் நம்பமுடியாததாக உள்ளது. உலகத் தரத்தில் தொழில்நுட்ப ஆற்றல், வலுவான டெவலப்பர் சூழல், அரசின் உறுதியான ஆதரவு ஆகியவற்றால், இந்தியா ஏஐ உலகத் தலைமை வகிக்கும் நாடாக உருவெடுக்கிறது. இந்தியாவில் எங்கள் அலுவலகம், உள்ளூர் குழுவை உருவாக்குவது இவை அனைத்தும் இந்தியாவுடன் சேர்ந்து ஏஐ நுட்பத்தை உருவாக்க எங்களது முதல் முக்கிய அடியாகும்” என்றார்.
இந்தியாவுக்கான சிறப்பு திட்டங்கள்: OpenAI இந்தியாவுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது:
- UPI மூலம் ChatGPT Pro சந்தா (₹399 மாதம்)
- OpenAI Academy
- இந்திய மொழிகளுக்கான GPT-5 மேம்பட்ட ஆதரவு
- மின்னணு துறை அமைச்சகத்துடன் இணைந்து AI கல்வியறிவு திட்டம்
மேலும், இந்தியாவில் மாணவர்கள், ஸ்டார்ட்-அப்கள், நிறுவனங்கள் ஆகியோரை இணைக்கும் வகையில், OpenAI இந்த மாதம் முதல் கல்வி மாநாடு, பின்னர் டெவலப்பர் தினம் நடத்த உள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “OpenAI இந்தியாவில் இருப்பை ஏற்படுத்துவது, நாட்டின் டிஜிட்டல் ஏற்பு மற்றும் ஏஐ புதுமையில் அதிகரித்து வரும் தலைமைத்துவத்தை உணர்த்துகிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம், நிறுவனங்களின் முதலீடுகள் ஆகியவற்றால், இந்தியா அடுத்த ஏஐ அலையை வழிநடத்தும் தனித்துவமான இடத்தில் உள்ளது,” என்றார்.