நாமக்கல்லில் ஆர்டிஓ அலுவலக ஊழியர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆசிரியை பிரமிளா ஆகியோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் மோகனூர் சாலை கலைவாணி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(55). இவர் திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரமிளா (51). மோகனூர் அருகேயுள்ள ஆண்டாள்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இவர்களது மகள் சம்யுக்தா (25). மகன் ஆதித்யா (21).
இந்நிலையில், நேற்று அதிகாலை நாமக்கல் அருகே வகுரம்பட்டி என்ற இடத்தில் நாமக்கல்-கரூர் ரயில்வே தண்டவாளத்தில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்து வந்த சேலம் ரயில்வே போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சுப்பிரமணியின் மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மகளின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அரசு ஊழியர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.
மகளின் காதல் விவகாரத்தில் ஆர்டிஓ மற்றும் ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனடியாக மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் உதவி எண்- 022-25521111 ஆகியவற்றில் தொடர்புகொள்ளலாம்.
Read more: Alert: 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று… மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை…!