வரும் செப். 1-ம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மத்திய அரசு 2025-26-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545-ஆகவும், பொதுரக நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500-ஆகவும் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த விலையில் தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாளை முதல் அடுத்த ஆண்டு ஆக. 31-ம் தேதி வரை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும். இதற்காக முதல்வர் பிறப்பித்த உத்தரவு கடந்த 29-ம் தேதி அரசாணையாக வெளியிடப்பட்டுஉள்ளது. நடப்பாண்டு விவசாயிகளிடமிருந்து 42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். சன்ன ரக நெல் 30 லட்சம் டன், பொது ரக நெல் 12 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும். தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 51 மாத திமுக ஆட்சியில் மொத்தம் 1.85 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.44,777.83 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்கு அரசு வழங்கியுள்ள ஊக்கத்தொகை மட்டும் ரூ.2031.29 கோடி. மேலும், நெல்லை திறந்தவெளியில் வைக்கக் கூடாது என்பதற்காக ரூ. 827.78 கோடியில் 7.33 லட்சம் டன் கொள்ளவு கொண்ட, மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.