ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிய மனுவில், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5, அன்று ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ஐ நீக்கியது, மேலும் மாநிலத்தை ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது..
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.. இந்த வழக்கில், கடந்த 2023 டிசம்பர் 11 அன்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.. அதில், பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தது, மேலும் ஜம்மு & காஷ்மீருக்கு 2024 செப்டம்பருக்குள் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் முடிந்து உமர் அப்துல்லா முதல்வராக உள்ளார்.. எனினும் இன்னும் மாநில அந்தஸ்து வழங்கப்படாமல் உள்ளது.. எனவே ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கல்வியாளர் ஜஹூர் அகமது, சமூக ஆர்வலர் குர்ஷைத் அகமது உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்..
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பூஷண் ஆர் கவாய் மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது
மனுதாரர்கள் ஜஹூர் அகமது பட் மற்றும் குர்ஷைத் அகமது மாலிக் ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் “ ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட இருந்தது. அந்தத் தீர்ப்புக்கு 21 மாதங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை.. எனவே விசாரணைக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும்..” என்று வாதிட்டார்..
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுவை எதிர்த்தார்.. ஏனெனில் அத்தகைய முடிவுகளில் “பல பரிசீலனைகள் உள்ளன” என்றும் வாதிட்டார். “தேர்தல் நடத்தப்பட்டன. இந்தக் கட்டம் சூழலை குழப்புவதற்கு சரியான கட்டம் அல்ல. இந்த கட்டத்தில் இந்தப் பிரச்சினை ஏன் எழுப்பப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. எட்டு வாரங்களுக்குப் பிறகு சொல்லுங்கள்,” என்று அவர் கூறினார்.
அப்போது நீதிபதிகள் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் “நீங்கள் அடிப்படை யதார்த்தங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும், ஏப்ரல் மாதத்தில் பஹல்காமில் என்ன நடந்தது என்பதை நீங்கள் புறக்கணிக்க முடியாது. எங்களிடம் அனைத்து நிபுணத்துவமும் இல்லை, மேலும் அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டிய சில முடிவுகள் உள்ளன.” என்று தெரிவித்தனர்.. மேலும் இதுகுறித்து மத்திய அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்..
இந்த மாத தொடக்கத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உட்பட 42 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துலா கடிதம் எழுதி, மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க நாடாளுமன்றத்தின் தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தினார்.
பஹல்காம் தாக்குதலும் இந்தியாவின் பதிலடியும்
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் 25 சுற்றுலாப் பயணிகளையும் ஒரு குதிரைப்படை வீரரையும் சுட்டுக் கொன்ற 3 பயங்கரவாதிகள் ஜூலை 28 அன்று டச்சிகாம் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர், பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் உறுதிப்படுத்தினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது.
தாக்குதல்களின் போது, இந்தியப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) 9 பயங்கரவாத முகாம்களை குண்டுவீசித் தாக்கின, குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆயுதமேந்திய ட்ரோன்கள் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்துவது உட்பட தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்களைத் தூண்டியது. மே 9-10 இரவு, இந்திய விமானப்படை 13 பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மற்றும் இராணுவ நிறுவல்களை குறிவைத்தது. இரு நாடுகளும் எட்டிய ஒரு புரிதலைத் தொடர்ந்து, மே 10 அன்று மாலை இராணுவப் போர் நிறுத்தப்படுவதற்கு முன்பு சண்டை நான்கு நாட்கள் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது..