அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிழவி வந்தது. இதனிடையே அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார்.
அதன் பிறகு தான் 10 நாள் கெடு விதிக்கவில்லை, என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி செங்கோட்டையன் ட்விஸ்ட் கொடுத்தார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற பாஜகவின் பேச்சைக் கேட்டு செங்கோட்டையன் குரல் கொடுத்த நிலையில், பாஜகவும் எடப்பாடியும் ஒன்று சேர்ந்து அவரை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள் என செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கூறினர்.
இந்த நிலையில் செங்கோட்டையன் மீண்டும் இபிஎஸ் உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களாக எந்த அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் அமைதி காத்து வந்த செங்கோட்டையன் மீண்டும் இபிஎஸ் உடன் இணைந்து தேர்தல் மற்றும் கட்சி பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



