இன்றைய காலகட்டத்தில், பெரியவர்கள் மட்டுமல்லாமல் பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. சொந்த பெற்றோரே தங்களது குழந்தைகளை உடல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
தாத்தா- பாட்டிகள் உடன் வசிப்பதில்லை என்பதால் பெற்றோர்கள் பெரும்பாலும் டே கேர்களில் தான் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெற்றோர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் குழந்தைகளை ஒப்படைக்கும் டே கேர் மையங்களில் கூட துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகி வருவது சமூகத்தின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், பெங்களூருவில் டே கேர் மையம் ஒன்றில் நடந்ததாகக் கூறப்படும் சமீபத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் செயல்பட்டு வரும் மழலையர் காப்பகம் ஒன்றில், இரண்டு வயது குழந்தைகள் அழுததாகக் கூறி அவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்ளப்பட்டதாக வெளியாகியுள்ள வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகளை தள்ளுவது, கடுமையாக கையாளுவது உள்ளிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளன.
இந்தச் சம்பவம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி நிறுவனத்தின் பெங்களூரு வளாகத்தில் செயல்பட்டு வந்த மழலையர் காப்பகத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குழந்தைகளைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஐந்து பெண் பராமரிப்பாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட மழலையர் காப்பகத்தை கேப்ஜெமினி நிறுவனம் நேரடியாக நிர்வகிக்கிறதா அல்லது ஒப்பந்த அடிப்படையில் வேறு நிறுவனம் நடத்துகிறதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாத்தா, பாட்டிகளின் அரவணைப்பில் மகிழ்ச்சியாக வளர வேண்டிய பிஞ்சுக் குழந்தைகள், யாரென்று தெரியாதவர்களின் கைகளில் சிக்கி துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் மனதை நொறுக்குகின்றன.
Also Read: காதலைக் காவு வாங்கியதா சாதி…? தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்!


