யூடியூப்பில் ஸ்பூஃப் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலம் ஆனவர்கள் கோபி – சுதாகர். ஆரம்பத்தில் அரசியல் தலைவர்களை கிண்டலடித்து வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், பின்னர் பரிதாபங்கள் (Parithabangal) என்கிற யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில், விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் வடக்கு ரயில் பாவங்கள் என்கிற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். அதில், வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வந்து குறைந்த சம்பளத்தில் வேலைபார்ப்பதையும், அவர்கள் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் திருட்டுத்தனமாக பயணிப்பதையும் சுட்டிக்காட்டினர். இந்த வீடியோ யூடியூப்பில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்த வீடியோ தான் தற்போது அவர்களுக்கு தலைவலியாகவும் மாறி உள்ளது. தற்போது தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களை மையப்படுத்தி எழுந்துள்ள பிரச்சனைக்கு இவர்கள் வெளியிட்ட இந்த வீடியோ தான் காரணம் எனக்கூறி அவர்களது யூடியூப் சேனலை தடை செய்யக்கோரி பாஜகவினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன், கோபி சுதாகரின் யூடியூப் சேனலை தடை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு சில இடங்களில் நடக்கும் தவறுகளினால் ஒட்டுமொத்த வடமாநில தொழிலாளர்கள் மீதும் வன்மத்தை ஏற்படுத்துவது என்பது தவறானது என்றும் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்க எடுக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதனால், கோபி சுதாகரின் யூடியூப் சேனலுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.