சுங்கக் கட்டணத்தை பாதியாக குறைக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய நேடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சுங்கக்கட்டணம் பெரும் தலைவலியாக உள்ளது. நீண்ட தூர பயணங்களில் ஒவ்வொரு சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.. அவ்வப்போது அரசு இந்த சுங்கக்கட்டணங்களை உயர்த்தி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.. இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது.. சுங்கக் கட்டணத்திலிருந்து நிவாரணம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..
10 மீட்டர் அகலம் கொண்ட, இருவழி தேசிய நெடுஞ்சாலையை 4 வழி நெடுஞ்சாலையாக விரிவுபடுத்தும் அதே வேளையில், சுங்கக் கட்டணத்தை பாதியாக குறைக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. அதாவது தற்போதைய சுங்கக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெடுஞ்சாலைகளில் கட்டுமானப் பணிகளின் போது, பயணிகள் சிரமங்களை எதிர்கொள்வதாலும், கட்டுமானத்தின் போது சாலைகளின் அகலம் குறைவதால் சிறந்த சேவை கிடைக்காததாலும் அமைச்சகம் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. தற்போது, இதுபோன்ற இருவழிச் சாலைகளில் கட்டுமானப் பணிகள் எதுவும் செய்யப்படாவிட்டாலும், சாதாரண சுங்கக் கட்டணத்தில் 60 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.
சுங்கக்கட்டணம் 30 சதவீதம் குறையும்
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டால், கட்டுமானத்தின் போது நெடுஞ்சாலையில் பயணிப்பவர் சாதாரண சுங்கக் கட்டணத்தை விட 30 சதவீதம் வரை குறைவான சுங்கக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். 4 வழிச் சாலைகளை 6 வழிச்சாலைகளாக அகலப்படுத்தும்போது அல்லது 6 வழிச்சாலைகளை 8 வழிச்சாலைகளாக விரிவுபடுத்தும்போது, கட்டுமானக் கட்டத்தில் வசூலிக்கப்படும் கட்டணம் வழக்கமான விகிதத்தில் 75 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25,000 கி.மீ இருவழிச் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்ற ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இருவழிச் சாலைகளின் விரிவாக்கம்
மொத்த 1.46 லட்சம் கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 80,000 கி.மீ நீளம் இந்த வகையில் வருவதால், அடுத்த பத்தாண்டுகளில் இருவழிச் சாலைகளை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது..
முன்னதாக, பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் முயற்சியாக, தனியார் வாகனங்கள் ஆண்டுதோறும் 200 சுங்கச்சாவடிகளைக் கடக்க அனுமதிக்கும் ரூ.3,000 ஆண்டு சுங்கச்சாவடி திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது. சமீபத்தில், வணிக மற்றும் கனரக வாகனங்களுக்கு பயனளிக்கும் வகையில், நெடுஞ்சாலைகளில் பாலங்கள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் இருந்தால், சுங்கக் கட்டணங்களை 50 சதவீதம் வரை குறைக்க அரசாங்கம் ஒரு புதிய விதியை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : சமோசா, ஜிலேபியில் எச்சரிக்கை வாசகம்..? மத்திய அரசு புதிய விளக்கம்.. உணவுப் பிரியர்கள் நிம்மதி..