தமிழகத்தில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 4 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்தவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்: ‘தொலைதூர கிராமங்கள், மலைப் பகுதிகள், புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே உள்ள 4 தொடக்கப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்’ என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
இதையடுத்து,இதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி ஆசிரியர் பணியிடங்களை அனுமதிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.
வேலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 4 தொடக்கப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ஒருவர் வீதம் 13 தலைமை ஆசிரியர்கள், 13 இடைநிலை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. தரம் உயர்த்தப்பட்ட 4 நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான 12 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பிக் கொள்ளலாம். இந்த பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ரூ.10.87 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



