திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் தேமுதிக கட்சிகள் இணைய வேண்டும் என நடிகை கஸ்தூரி விருப்பம் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளில் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார். திமுக அரசை கடுமையாக விமர்சித்து, பெண்களின் பாதுகாப்பு குறைவு, ஆணவக் கொலைகள், குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். அண்மையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடிகை கஸ்தூரி பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைந்தார். இந்த நிலையில் திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் தேமுதிக கட்சிகள் இணைய வேண்டும் என நடிகை கஸ்தூரி விருப்பம் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் பாஜகவில் இணைந்த அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைக்கவில்லை எனவும், தமிழக மக்கள் மாற்றத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். பா.ஜ.,வில் இணைந்தது தொடர்பாக அவர் பேசுகையில், ‛‛திமுக.,வினர் என்னை ‛சங்கி.. சங்கி..’ என நான்கு வருடமாக சொல்லி சொல்லி ஏற்கனவே என்னை பா.ஜ.,வில் சேர்த்துவிட்டனர். திமுக.,வினர் என்னை இழிவுப்படுத்த வேண்டும் என நினைத்து அப்படி சொன்னார்கள்.
ஆனால், சமீபத்தில் நடந்த பல சமூக விஷயங்களில் திமுக அரசின் பாராமுகத்தை பார்த்து கட்சி அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் பா.ஜ.,வில் சேர்ந்ததற்கான முழு ‛கிரெடிட்’ம் திமுக.,வுக்கு தான் கொடுக்க வேண்டும். நான் ஏற்கனவே மக்கள் பணிகளை செய்து வருகிறேன். அதனை தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். வேறு எந்த பணம், பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சியில் சேரவில்லை” எனக் கூறியுள்ளார்.