2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறி விட்டது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். ஆனால், தலைவர் அன்புமணியோ பாஜக கூட்டணியை விரும்பினார். இறுதியில், அன்புமணியின் விருப்பப்படியே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. அதுவரைக்கும் ராம தாஸ் – அன்புமணி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு இந்தக் கூட்டணி முடிவை அடுத்து மோதல் போக்காக மாறியது.
பாமக-வில் தந்தை மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அன்புமணியை அங்கீகரித்துள்ளது, அது மட்டுமின்றி கட்சியின் மாம்பழச் சின்னமும் அன்புமணி பக்கம் சென்றுள்ளது. இந்த நிலையில் அந்தக் கட்சி 2026-ல் எந்தக் கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தமிழ்நாடு பாஜக-வின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பைஜெயந்த் பாண்டா, கடந்த வாரம் பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்-ஐ சந்தித்துப் பேசினார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம்பெறும் என அன்புமணி நம்பிக்கை தெரிவித்ததாக கூறப்படுகிறது. விரைவில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக, பாஜக, தவெக கட்சிகளுடன் இன்னும் சில சிறிய கட்சிகளும் இணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என்று கணக்குப் போட்டு அந்தக் கூட்டணியில் இணைய அன்புமணியும் விருப்பம் தெரிவித்துள்ளார். அதேசமயம் கட்சியை பலப்படுத்தவும், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும் தங்களுக்கு இம்முறை கணிசமான எம்எல்ஏ-க்கள் தேவை என்பதால் 30 தொகுதிகளை தங்களுடைய கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அன்புமணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாகச் தகவல் வெளியாகியுள்ளது.



