தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கவின், கடந்த மாதம் 27-ம் தேதி நெல்லையில் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன், விடுமுறை முடிந்து நேற்று பணியில் சேர்ந்தார். சேர்ந்தவுடன், ஒரே பிரச்சினைக்கு தொடர்பான 2 புகார்கள் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் வந்தன. அதில், இடம் தொடர்பான பிரச்சினை, கோடிகளில் பணம் கொடுக்கல் வாங்கல், கொலை மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன.
நெல்லை ஆலந்தூரில் இடம் தொடர்பான பிரச்சினையில், தன்னிடம் சமரசமாக செல்ல ரூ.2.5 கோடி வழங்கப்பட்டதாகவும், அதில் பங்கு கேட்டு, பல கொலை வழக்குகளில் தொடர்புடைய கோட்டூர் ரபீக் தன்னை கொலை மிரட்டியதாகவும் ஏ.எம்.பாரூக் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை வாங்கிய பொறுப்பு கமிஷனர், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அனுப்பாமல் தன்னிடமே வைத்துக் கொண்டார்.
இந்நிலையில், நேற்று கோட்டூர் ரபீக் ஒரு புகார் கொடுக்கிறார். அந்தப் புகாரில், ‘என் மீது பல கொலை வழக்குகள் இருந்தது. சென்னையைச் சேர்ந்த ஏ.கே.ஆர்.பாரூக் என்பவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவருக்கு கிண்டியல் 10 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்தநிலத்தை கவனிக்க ஒரு நபர் வேண்டும் என்று கேட்டார். இதனால் நெல்லையைச் சேர்ந்த ஏ.எம்.பாரூக் என்பவரை அனுப்பி வைத்தேன். அவர், அந்த நிலத்தை பாதுகாத்தவர், பின்னர் காலி செய்ய மறுத்து விட்டார். இதற்காக ரூ.3 கோடி கேட்டு, ரூ.2.5 கோடி வாங்கியுள்ளார்.
இது குறித்து ஏ.கே.ஆர்.பாரூக் என்னிடம், நீங்கள் அறிமுகம் செய்து வைத்தவர், மிரட்டி பணம் வாங்கிவிட்டார் என்றார். இதனால், அந்தப் பணத்தை நான் கேட்டேன். ஆனால் அவரை நான் மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார். இதனால் சென்னை பாரூக் கொடுத்த பணத்தை வாங்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதில், பாதிக்கப்பட்டவர் சென்னையைச் சேர்ந்த ஏ.கே.ஆர்.பாரூக் என்பவர் என்பதால், அவரே புகார் கொடுக்க வேண்டும் என்றாலும், சம்பந்தமில்லாமல் கோட்டூர் ரபீக் வக்கீலுடன் கமிஷனரைச் சந்தித்து புகார் அளித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்படி மத்திய குற்றப்பிரிவுக்கே அனுப்ப வேண்டிய புகாரை, சட்டம்-ஒழுங்கு போலீசான காசிப்பாண்டியனுக்கே கமிஷனர் ஒப்படைத்தது கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், வழக்குப் பதிவு செய்யாமல், இரு தரப்பையும் அழைத்து பேசிச் PNS 129 விதியின் கீழ் தாசில்தார் முன்பு பிணைய பத்திரம் எழுதி, 1 மணி நேரத்தில் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதிலும் ஆச்சரியம் என்னவெனில், நீதிமன்ற வளாகத்தில் கோட்டூர் ரபீக், அவரது வக்கீல், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து நீண்ட நேரம் பேசியது.
இந்தச் சந்திப்பும், சிவில் வழக்கில் போலீஸ் ‘பஞ்சாயத்து’ நடத்தியது, வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்தது போன்ற நடவடிக்கைகளும், நெல்லை போலீஸ் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளன.
Read more: நோட்..! வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய செப்.15 வரை கால அவகாசம்…!