நெல்லை பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறி 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவு 11 மணியளவில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை சமாதானப்படுத்துவதற்காக ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு காவலர்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, 17 வயது சிறுவன் ஒருவன் வீட்டிற்குள் இருந்த காவலர்களை நோக்கி அரிவாளுடன் வெட்ட முயன்றுள்ளார்.
நிலைமையை கட்டுப்படுத்தவும், தங்களைப் பாதுகாப்பதற்காகவும் சிறுவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச்சூட்டில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு, உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.