ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்திட உதவ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பெண்ணின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை உள்ளிட்டோர், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனு குறித்து இறந்த பெண்ணின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது; திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா ஆகிய எங்கள் மகளுக்கு, கைகாட்டி புதூர் கவின் குமார் என்பவருடன் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு 100 பவுன் நகை மற்றும் 62 லட்ச ரூபாய் மதிப்பிலான காரும் வரதட்சணையாக கொடுத்தோம்.
இந்நிலையில், மேலும் 200 பவுன் நகை கேட்டும், பணம் கேட்டும் அடிக்கடி ரிதன்யாவுக்கு தொந்தரவு கொடுத்தனர். மேலும் பாலியல் ரீதியாகவும் அவரை கவின்குமார் கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி முண்டிப்பாளையம் பகுதியில் காரில் மர்மமான முறையில் ரிதன்யா இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி, அவரது கணவர் கவின்குமார் மற்றும் பெற்றோர் ஈஸ்வரமூர்த்தி, சித்ரா ஆகியோரை கைது செய்தனர்.
எனது மகளுக்கு செய்யப்பட்ட கொடுமைகள் குறித்து அவர் எனக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ தகவல்களை அனுப்பி உள்ளார். இந்த நிலையில், கவின்குமாரின் தாத்தா கிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் உள்ளதால் விசாரணையை திசைதிருப்பி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதனால் என் மகளின் மரண வழக்கில் உரிய விசாரணை நடைபெறாது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உதவிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் ரிதன்யா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி விரைவான விசாரணை நடத்தி உரிய நீதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தி உள்ளதாக கூறினார்.