போட்டி கட்சிகள், வேட்பாளர்களுக்கு எதிரான காணொலி காட்சிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிக்கை 2025 அக்டோபர் 6 அன்று வெளியிடப்பட்டதை அடுத்து, நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல்கட்சிகளின் சமூக ஊடகம் உட்பட இணைய தளத்தில் கருத்துகளை பதிவிடுவதற்கும் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடத்தை நெறிமுறைகளின்படி, மற்ற கட்சிகள் மீதான விமர்சனங்கள் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்தே இருக்க வேண்டும். கட்சிகளும் வேட்பாளர்களும் பிற கட்சிகளின் தலைவர்கள் அல்லது தொண்டர்களின் பொதுவாழ்வுடன் தொடர்பில்லாத தனிப்பட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகள் அல்லது திரித்து கூறுவதன் அடிப்படையில் பிற கட்சிகள் அல்லது அவற்றின் தொண்டர்களை விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
தேர்தல் செயல்முறையின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பும் போலிகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஆணையம் கட்சிகளுக்கு அறிவுறுத்தியது. தேர்தல் நடைமுறைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் வகையில் சமூக ஊடகப்பதிவுகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. நடத்தை நெறிமுறைகளை திறம்பட அமல்படுத்துவதை உறுதிசெய்வதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் மீறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.